×

கயத்தாறு-தேவர்குளம் சாலை அகலப்படுத்தும் பணி துவங்கியது

கயத்தாறு, மார்ச் 2: கயத்தாறு - தேவர்குளம் சாலை அகலப்படுத்தும் பணி, தினகரன் செய்தி எதிரொலியாக துவங்கி நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் இருந்து நெல்லை மாவட்டம் தேவர்குளம் வரை செல்லும் சாலையை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 15 கிமீ தூரமுள்ள இச்சாலை கயத்தாறில் இருந்து அய்யனாரூத்து கிராமம் வரை தூத்துக்குடி மாவட்டத்திலும், மேல இலந்தைகுளத்தில் இருந்து தேவர்குளம் வரை நெல்லை மாவட்டத்திலும் அமைந்துள்ளது. இந்த சாலையை இருபுறமுள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.

கயத்தாறில் அமைந்துள்ள கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களும், அருகிலுள்ள நெல்லை, கோவில்பட்டியில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களும், பணிக்கு செல்கின்ற அலுவலர்களும் தங்களது இருசக்கர வாகனங்களில் பயணிக்க இச்சாலையையே அதிகம் நம்பியுள்ளனர். மேலும் இச்சாலை அமைந்துள்ள பகுதியில் அரசு மற்றும் தனியார் காற்றாலைகள் அதிகளவில் இயங்குகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான், பசுவந்தனை, கடம்பூர் போன்ற பகுதிகளில் இருந்து செங்கோட்டை, தென்காசி போன்ற ஊர்களுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் குறுக்கு வழியாக இந்த சாலையையே பயன்படுத்துகின்றனர். முக்கியத்துவம் பெற்ற இச்சாலை, ஒரு வாகனம் மட்டுமே செல்கின்ற வகையில் அமைந்திருந்ததால் விபத்து அபாயம் நிலவியது. இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்பது கிராம மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையாகும். இதுகுறித்து கடந்த டிசம்பர் 27ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து இந்த சாலையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கயத்தாறு - தேவர்குளம் சாலையை அகலப்படுத்தும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. சாலை பணிகள் மும்முரமாக நடந்து வருவதால் சுற்றுவட்டார கிராம மக்கள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.

Tags : Kayathar ,Devarkulam ,
× RELATED மனைவியை மிரட்டிய கணவன் கைது